தமிழ்நாடு

ஆணவக் கொலை: கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதி அஞ்சலி!

“என் மகன் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தாயை உடனே கைது செய்ய வேண்டும். சுர்ஜித்தின் பெற்றோரை உடனே காவல் பணியில் இருந்து நீக்க வேண்டும்” என கவினின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

ஆணவக் கொலை: கவினின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. இன்று இறுதி அஞ்சலி!
IT Techie Honor Killing case: Family Receives Kavin Body After Protests
நெல்லையில் பட்டப்பகலில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் இன்று அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் இறுதி அஞ்சலி இன்று நடைபெற உள்ளது.

திருநெல்வேலி அருகே கடந்த ஜூலை 27 ஆம் தேதி ஐ.டி.ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்:

இந்த நிலையில், கவின் குமார் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் என்பவர் கடந்த 27 ஆம் தேதியன்று திருநெல்வேலி மாநகரில் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, இறந்த கவின் செல்வகணேஷின் தாயார் கொடுத்த புகார் மனுவின் மீது பாளையங்கோட்டை காவல் நிலைய குற்ற எண்.396/2025 சட்டப் பிரிவுகள் 296(b), 49, 103(1) BNS உ/இ சட்ட பிரிவுகள் 3(1)(r) 3(1)(s) 3(2)(v) ( வன்கொடுமை தடுப்பு) சட்டம் ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவலர்கள் பணியிடை நீக்கம்:

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வரும், குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சகோதரியும் பழகி வந்த நிலையில், இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித் அதே நாளில் (ஜூலை 27) கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் காவல் சார்பு ஆய்வாளர்களாக பணியாற்றி வருகின்றனர். விசாரணை பாரபட்சமற்றதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, இந்த வழக்கு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத்துறை (CBCID) க்கு மாற்றப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெற்றோரை கைது செய்ய வலுத்த கோரிக்கை:

குற்றவாளி சுர்ஜித்தின் பெற்றோர்களையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என கவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது தான் கவினின் உடலை வாங்குவோம் எனவும் கூறி வந்தனர். அரசியல் கட்சிகளும் கவின் குடும்பத்தினருக்கு ஆதரவாக அரசுக்கு அழுத்தம் கொடுத்த நிலையில், வழக்கில் சம்மந்தப்பட்ட சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணன் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்யா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதித்துறை நடுவர் சரவணனை வரும் ஆக.8ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கவின் உடலுக்கு இறுதி அஞ்சலி:

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியையும் கைது செய்யக்கோரி போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்நிலையில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து, தங்களது போராட்டத்தை தவிர்த்து கவின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர்கள் தரப்பில் சம்மதம் தெரிவித்தனர்.
இன்று (ஆகஸ்ட் 1) காலை, கவின் உடல் அவரது தந்தையார் சந்திரசேகர் மற்றும் தம்பி பிரவீன் இடம் திருநெல்வேலியில் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தில் இறுதி அஞ்சலி இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக தனிச் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.