தமிழ்நாடு

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!

கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.

கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!
கரூர் நெரிசல் விவகாரம்: தவெக நிர்வாகிகள் குளறுபடியே காரணம் - ஐஏஎஸ் அமுதா விளக்கம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இந்தக் கொடுந்துயரச் சம்பவத்திற்குக் கூட்ட நெரிசல் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளின் குளறுபடியே காரணம் என்று அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

கரூர் விவகாரம் - அமுதா ஐஏஎஸ் அளித்த விளக்கம்:

த.வெ.க.வினர் முதலில் கேட்ட இடங்களில் அமராவதி ஆற்றுப் பாலமும், பெட்ரோல் பங்க்கும் இருந்தன. இரண்டாவதாகக் கோரிய உழவர் சந்தை பகுதி மிகக் குறுகிய இடம் என்பதால், அங்கு 5,000 பேர் மட்டுமே திரள முடியும். இதையடுத்து, வேலுசாமிபுரம் பகுதியை ஒதுக்கீடு செய்வதாகக் கூறியபோது, அதனைத் த.வெ.க.வினர் ஏற்றுக்கொண்டனர்.

விஜய் வருகையின்போது என்ன நடந்தது?

தடியடி நடத்தப்பட்டதா என்பது குறித்து எழுந்த கேள்விக்கு அமுதா ஐஏஎஸ் பதில் அளித்தார். விஜய் வரும்போதே ஏற்கனவே கூட்டம் அதிகமாக இருந்தது. அவருடன் சேர்ந்து மேலும் கூட்டம் வந்ததால், அவர் வண்டி முன்னே செல்ல வழியில்லாமல் நின்றது. உடனடியாக டிஜிபி உள்ளிட்ட காவல்துறையினர் மக்களை விலக்கிவிட்டனர்.

ஒரு கட்டத்தில் கூட்டம் அதிகரிக்கவே, டிஎஸ்பி தரப்பினர் விஜய் தரப்பினரிடம் முன்னே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால், த.வெ.க. நிர்வாகிகள் இதனை ஏற்றுக்கொள்ளாமல், "இன்னும் முன்னே செல்வோம்" என்று கூறினர். கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பான வீடியோவையும் அரசுத் தரப்பில் வெளியிட்டனர்.

மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கான காரணம்

மின்சாரம் நிறுத்தப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்குப் பதிலளித்த அமுதா ஐஏஎஸ், அது பாதுகாப்பு நடவடிக்கையே என்று தெரிவித்தார். "ஜெயலலிதாவைச் சுற்றியுள்ள தகடுகளை த.வெ.க.வினர் பிரித்துச் சென்றதால், பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. த.வெ.க. துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது."

பாதுகாப்புக் குறைவு குறித்த விளக்கம்

பாதுகாப்புக் குறைவு குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமுதா ஐஏஎஸ் மறுப்பு தெரிவித்தார். த.வெ.க. தரப்பில் 10,000 பேர் வருவார்கள் என்றே கடிதம் எழுதியிருந்தார்கள். முந்தைய கூட்டங்களைக் கருத்தில்கொண்டு, 20,000 பேர் வருவார்கள் எனக் கணித்து அதற்கேற்ப காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுவாக, 50 பேருக்கு ஒரு காவலர் என்பதே நடைமுறை. ஆனால், கரூரில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு போடப்பட்டது.

த.வெ.க. தலைவர் விஜயின் பதில்:

அரசின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், த.வெ.க. தலைவர் விஜய் தரப்பில், "நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று கூறப்பட்டுள்ளது. "நாங்கள் எங்களுக்கு வழங்கிய இடத்தில் தான் பேசினோம். அரசியல் காரணங்களை தள்ளி வைத்து விட்டு மக்களின் பாதுகாப்பை மனதில் வைத்து அதற்கான இடங்களைத் தேர்வு செய்து அனுமதி கேட்டோம். ஆனால் நடக்கக் கூடாதது நடந்து விட்டது."

கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்குப் பிரச்சாரத்துக்குப் போனோம். இது மாதிரி எதுவும் நடக்கவில்லை. ஆனால் கரூரில் மட்டும் இது போன்று நடக்கிறது. எப்படி நடந்தது?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.