மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் முப்படைகளின் ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து, டெல்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டு, தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்குகுடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள், உலகத் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன்சிங் உடலுக்கு, அவரது மனைவி குர்ஷரன் கவுர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் உடல் அங்கிருந்து டெல்லி யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தலைவர்களின் இறுதி மரியாதையை தொடர்ந்து, டெல்லி யமுனை நதிக்கரையில் சீக்கிய மத முறைப்படி, முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.