தமிழ்நாடு

சமூக ஊடகத்தால் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கிறது – வேல்முருகன் எம்.எல்.ஏ

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு போர்க்கால அடிப்படையில் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என வேல்முருகன் கோரிக்கை

சமூக ஊடகத்தால் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கிறது – வேல்முருகன் எம்.எல்.ஏ
த.வா.க தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நிரந்தர பணி வேண்டி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதியிலும் ஆசிரியர்களின் பணி நிரந்தரம் ஆக்குவதாக வாக்குறுதி தந்தார்கள். ஆனால் நிதி நிலைமை காரணமாக 2000 பேருக்கு மட்டுமே ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் பணி நிரந்தரம்

22 ஆயிரம் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்போது நிரந்தர பணி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். உடனடியாக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.

இதேபோல் குழந்தைகளை கடத்துவது, பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற கொடுமையான செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் பிணை வழங்கக்கூடாது. அவர்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுத்தால் மட்டுமே, இதுபோன்ற கொடுமையை தடுக்க முடியும். கவன ஈர்ப்பு பெறும் வழக்குகளில் மட்டுமே விசாரணை விரைவாக நடைபெறுகிறது.அதுபோல் இல்லாமல் அனைத்து குற்றங்களையும் விரைவாக விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதற்கு முக்கிய காரணம் போதை தான். மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாம தமிழகத்தை உருவாக்கினால் மட்டும்தான் தமிழ் சமுகம் பாதுகாப்பாக வாழ முடியும்.

தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளை விட எங்கள் கட்சிக்கு சில கோரிக்கைகள் உள்ளது. அதை திமுகவிடம் வைத்துள்ளோம். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுத்து, அனைத்து சாதிகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, உரிமை வழங்க வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கும் போதே, மாநில அரசு உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும். அதை போர்க்கால அடிப்படையில் முதல்வர் செய்ய வேண்டும்.

தமிழர்களுக்கு பணி

அதேபோல் தமிழக அரசு பதவிகளில் மத்திய, மாநில பணிகள் எதுவாக இருந்தாலும், அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தற்போது கூட ரயில் விபத்துக்கு காரணம் மொழி தெரியாதது தான். எனவே மத்திய, மாநில அரசுகளில் 90% தமிழர்களுக்கு பணி வழங்க வேண்டும்.

தற்போது மோசமான கலாச்சாரம் உருவாகி வருகிறது. மொபைல் போன்களால் சமூக வலைதளமான யூடியூப்பில் மிக ஆபாசமாக பேசுகிறார்கள். இதனால் இளைய சமூகம் சீரழிந்து வருகிறது. இதைக்கண்டித்து நான் ஒரு கூட்டத்தில் பேசியபோது, அதை அரசியல் ஆக்கினார்கள். இங்கு யாராவது ஒரு அரசியல்வாதி அல்லது பத்திரிகையாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் யாராவது இது குறித்து பேசினால், வேறு விதமாக அதை அரசியலாக்கி திணிக்கிறார்கள். சமூக ஊடகங்கள் வந்த பிறகு அதிகமான குற்ற சம்பவங்கள் நடக்கிறது. இதை உடனடியாக மத்திய அரசு கடுமையான சட்டம் கொண்டு வந்து தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.