தமிழ்நாடு

17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஊர் நாட்டமையின் மகன் – தர்ணாவில் ஈடுபட்ட தாய்

காவல் நிலையத்தில் புகரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பாதிக்கபட்ட சிறுமி மற்றும் தாய் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஊர் நாட்டமையின் மகன் – தர்ணாவில் ஈடுபட்ட தாய்
சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்ணா போராட்டம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே மேக்கிழார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் - கமலா இவர்களது மகன் சிவபாரதி (23) . இவர் தனது உறவினர் பெண்ணான 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சுற்றி வந்துள்ளார். தொடர்ந்து 17 வயது சிறுமியிடம் தனது தந்தை ஊர் நாட்டாமை என்பதால் அவர் சொன்னால் நம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்று சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கி உள்ளார்.

சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்

பின்னர் சிறுமி அடிக்கடி உடல்நலம் பாதிப்படைய சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிந்துகொண்டு சிறுமியை கண்டித்து இதற்கு யார் காரணம் என கேட்கும்போது, சிவபாரதி தன்னிடம் திருமண ஆசை வார்த்தைக்கு கூறி தன்னை கர்ப்பமாக்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி மற்றும் அவரது தாய், சிவபாரதியின் வீட்டிற்குச் சென்று இதுகுறித்து கேட்க அவர்கள் தகாத வார்த்தையில் திட்டி இதற்கு எங்களது மகன் காரணம் இல்லை கூறியதாக கூறப்படுகிறது.

பின்னர் சிறுமி ஆண்டிப்பட்டி காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு சிவபாரதி, அவரது தாய் கமலா மற்றும் அவரது உறவினர்களின் மீது புகார் அளித்த நிலையில் போக்சோ வழக்கு போட்டு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர்.

தர்ணா போராட்டம்

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தனது மகளுடன் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தனது மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சிவபாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை செல்லமாட்டேன் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் சிவபாரதி மற்றும் அவரது குடும்பத்தினரை இதுவரை போலீசார் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொள்ளாமல், தங்களைத் தொடர்ந்து அலைக்கழித்து வருவதாக வேதனையுடன் புகார் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்து சென்றனர். இதனால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.