தமிழ்நாடு

"அடிப்படை வசதிகள் இல்லை" - பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியின் வாயில் முன் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கக் கோரி தேவனாம்பட்டினம் பெரியார் கலைக்கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை அருகே பெரியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி அருகே உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி விடுதியில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விடுதி மாணவர்கள் அனைவரும் பெரியார் கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து அறிந்த தேவனாம்பட்டினம் காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.