தமிழ்நாடு

சொல்லியும் கேட்காத பெற்றோர்...எஸ்.ஐ மகளின் முடிவால் விபரீதம்

திருமணம் பிடிக்கவில்லையெனச் சொல்லியும் பெற்றோர் திருமண நிச்சயதார்த்திற்கு ஏற்பாடு செய்ததால் மன உளைச்சலில் மகள் எடுத்த விபரீத முடிவு

சொல்லியும் கேட்காத பெற்றோர்...எஸ்.ஐ மகளின் முடிவால் விபரீதம்
சென்னையில் மகளின் முடிவால் எஸ்.ஐ விபரீத முடிவு ( ஏ.ஐ.புகைப்படம்)
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆனந்தன்(55). இவர் புழல் காவல் நிலையத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி சரளா என்ற மனைவியும், சபரிதா (24), தீஷீத்தா(19) என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் சபரிதா பட்டப்படிப்பு முடித்து விட்டு நந்தனம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த. ஏழு மாதங்களாக ரிசர்ச் அசோசியேட்டாகப் பணியாற்றி வந்துள்ளார்.

காதல் விவகாரம்

மேலும் சபரிதா ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மகளுக்கு வேறோரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்து திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தனக்கு பிடிக்கவில்லையெனப் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்த வந்த சபரிதா தனது காதல் விவகாரத்தைத் திருமணம் நிச்சயம் செய்தவருக்கு அவரது நண்பர்மூலம் தகவல் தெரிவித்ததாகத் தெரிகிறது.இதனால் கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் இதுகுறித்து உதவி ஆய்வாளர் ஆனந்தனிடம் கேட்டுச் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் ஆனந்தன் கடந்த 13ம் தேதி தனது மகள் சபரிதாவிடம் இதுகுறித்து கேட்டுத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சபரிதா 13ம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்.ஐ விபரீத முடிவு

இதனை வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்த நிலையில் ஆக.15ம் தேதி சபரிதா தொடர்ந்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்ததை பார்த்த பெற்றோர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சபரிதாவுக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் அவரது உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதால் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சபரிதாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே தனது மகள் தற்கொலை முயற்சிக்கு நான் தான் காரணம் என்று நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளான உதவி ஆய்வாளர் ஆனந்தன் கடந்த 17ம் தேதி திருவிக நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் உதவி ஆய்வாளர் ஆனந்தன் உடலைக் கைப்பற்றித் திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சபரிதா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம்குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிதா உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்து வைத்ததது பிடிக்காமல் மகள் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டதும், மகள் தற்கொலைக்கு நான் தான் காரணம் என்று நினைத்துத் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.