தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை.. 3 பேரை கடத்திய கும்பல்.. போலீசார் அதிரடி

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 3 பேர் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் 2 மணிநேரத்தில் மீட்டனர்.

ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனை.. 3 பேரை கடத்திய கும்பல்.. போலீசார் அதிரடி
போலீசார் அதிரடி
சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த செந்தில், மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டைச் சேர்ந்த ஆனந்தன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பானாதுரையைச் சேர்ந்த மணிகண்டன், ராஜ்குமார், அன்சாரி, பரோஸ்கான், கேசவன் ஆகியோர் ஒன்றாக இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இதில், பரோஸ்கான் மற்றும் அன்சாரி ஆகிய இருவரும் 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்மையில் விற்கப்பட்ட நிலத்திற்கான லாபத்தையும், முதலீடு செய்த தொகையினையும் செந்தில் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பரோஸ்கான், அன்சாரி, கேசவன் ஆகிய மூவரும் மயிலாடுதுறை மாவட்டம் பேரளம் பகுதியைச் சேர்ந்த பாடாலீஸ்வரன் என்பவரை அணுகி செந்தில் உள்ளிட்டோரிடமிருந்து பணத்தை பெற்று தர கூறியுள்ளனர்.

அதற்கு பாடாலீஸ்வரன் தனது நண்பரான தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையை சேர்ந்த பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் முன்னாள் மாநில செயலாளரும், ரவுடியுமான கார்த்திகேயேன் என்பவரை சந்திக்க கூறியுள்ளார். அதன்பேரில் கடந்த 28-ஆம் தேதி இரவு செந்தில், ஆனந்தன், மணிகண்டன் ஆகிய மூவரையும் தொடர்புக்கொண்ட கார்த்திகேயேன், திருவிடைமருதுார் அருகே தனியார் ரெஸ்டாரண்டிற்கு வர வைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் பணம் தர செந்தில் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. உடனே கார்த்திகேயேன், அன்சாரி, பரோஸ்கான், கேசவன் உள்ளிட்ட 13 பேரும் பேச்சுவார்த்தைக்கு வந்த செந்தில், ஆனந்தன்,மணிகண்டன் ஆகிய மூவரையும் கடத்தி மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த கடத்திலின் போது சுதாரித்துக்கொண்ட செந்தில் தனது மொபைலில் இருந்து வாட்ஸ் அப் மூலம் தனது மனைவிக்கு லைவ் லொகேஷனுடன் கடத்தல் தொடர்பான தகவலையும் தெரிவித்துள்ளார்.

உடனே செந்தில் மனைவி தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் இரண்டு மணி நேரத்தில் செந்தில், ஆனந்தன், மணிகண்டன் ஆகிய மூவரையும் கடத்தலில் இருந்து மீட்டனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கார்களும், கடத்தப்பட்டவர்கள் பயன்படுத்திய ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் நபர்களான காரைக்கால் பகுதியைச் சேர்ந்த வீரசாமி, சோமுராஜா, மணிகண்டன், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன், கண்ணதாசன், மோகன், சாரதி, சங்கர், மயிலாடுதுறையைச் சேர்ந்த கேசவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய கார்த்திகேயேன், பிரகதீஷ், அன்சாரி, பரோஸ்கான் ஆகிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.