தமிழ்நாடு

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயின் நாமக்கல் வருகையையொட்டி, பால் விநியோகம் செய்யச் சென்ற பால் முகவர் சங்க நிர்வாகியைத் தடுத்து நிறுத்தி, மிரட்டிய போக்குவரத்து காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!
நடிகர் விஜய்க்காகப் பால் விநியோகத்தை தடுத்த போலீஸ் - நடவடிக்கை எடுக்கக் கோரி பால் முகவர்கள் சங்கம் புகார்!
இன்று (செப். 27) நாமக்கல் - சேலம் சாலையில் நடிகர் விஜயின் பரப்புரைக்காகத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்குப் பால் விநியோகம் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு. ந. அருண் அவர்களைப் போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தான் பால் முகவர் என்றும், அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளதால் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அருண் கோரியுள்ளார். மேலும், அவர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்பதற்கான அடையாள அட்டையைக் காட்டியபோது, "நீ மாவட்டத் தலைவராக இரு, இல்லை, வேறு யாராக வேண்டுமானாலும் இரு, நடிகர் விஜய் வருவதால் அனுமதிக்க முடியாது" என்று கூறி அவரைச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

வீடியோ எடுத்ததால் மிரட்டல்:

இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலர்களின் அத்துமீறலை வீடியோ எடுக்கச் சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் அருண் தனது கைபேசியில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட காவலர்கள் அருணின் சட்டையைப் பிடித்து இழுத்து, "எங்களையே வீடியோ எடுக்குறியா..? உன்னை ரிமாண்ட் செய்தா என்ன பண்ணுவ..?" என்று மிரட்டியுள்ளனர். மேலும், அவரது கைபேசியைப் பிடுங்கி, அதில் இருந்த அனைத்து வீடியோக்களையும் (கேலரி மற்றும் ரீசைக்கிள் பின் உட்பட) முழுமையாக டெலிட் செய்ய வைத்துள்ளனர். இதன் பின்னர், அவர் பால் பாக்கெட்டுகளைத் தோளில் சுமந்து சென்று விநியோகம் செய்ய அனுமதித்துள்ளனர்.

சங்கத்தின் கண்டனம் மற்றும் கோரிக்கை:

இதுகுறித்துச் சங்கத்தின் நிறுவனர் மாநிலத் தலைவர் சு.ஆ. பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்கை பேரிடர் காலங்களில் கூடப் பால் விநியோகத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையினரே, ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் வருகைக்காக அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டு அடக்குமுறையைக் கையாண்டதைச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

எனவே, பால் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள முகவரை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும், காவல்துறை இயக்குநர் அவர்களையும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பால் முகவர்களுக்கு எந்தத் தடையும் ஏற்படுத்தக் கூடாது என முதலமைச்சர் உடனடியாக அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.