தமிழ்நாடு

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில் போக்குவரத்தில் தாமதம்.. பயணிகள் கடும் அவதி

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தட தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தாமதமானதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தண்டவாள இணைப்பில் கோளாறு: ரயில் போக்குவரத்தில் தாமதம்.. பயணிகள் கடும் அவதி
Train track connection problem
சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க புறநகர் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் சேவையில் அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகள் காரணமாக ஏராளமான பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்த நிலையில், அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாள இணைப்பில் (point failure) நேற்று இரவு ஏற்பட்ட கோளாறு காரணமாக அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சென்னை - பெங்களூரு விரைவு ரயில், மேட்டுப்பாளையம் - சென்னை நீலகிரி விரைவு ரயில், மைசூரிலிருந்து சென்னை செல்லும் காவிரி விரைவு ரயில், காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் விரைவு ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து செல்லும் மின்சார ரயில்கள் என அனைத்தும் இதனால் காலதாமதமாகின.

தண்டவாளப் பழுதுபார்க்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1.30 நிமிடங்கள் வரை விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன.

சென்னை - அரக்கோணம் - காட்பாடி மார்க்கம், சென்னை - மீஞ்சூர் - பொன்னேரி மார்க்கம், சென்னை - செங்கல்பட்டு மார்க்கம் உள்ளிட்ட ரயில் பாதைகளில் கடந்த சில நாட்களாக ரயில் விபத்து மற்றும் சேவையில் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ரயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், தெற்கு ரயில்வே நிர்வாகம் ரயில் சேவையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும், உரிய முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ரயில் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.