தமிழ்நாடு

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
Shocking video of school students smoking cigarettes in school uniform
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் சீருடையில் டீக்கடையில் சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீருடையில் சிகரெட் பிடிக்கும் மாணவர்கள்

திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு காந்தி சிலை அருகே உள்ள ஒரு டீக்கடையில், பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடித்துள்ளனர். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சில மாணவர்கள் டீ குடிக்கும்போது, மற்றவர்கள் சிகரெட் பிடிப்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ வைரலானதையடுத்து, கிருஷ்ணகிரி சாலையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், பள்ளிக்குச் செல்லும் முன் அருகிலுள்ள டீக்கடையில் இதுபோல தினமும் சிகரெட் மற்றும் டீ குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பள்ளிக்கு அருகாமையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தாலும், மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் சீரழிவதைத் தடுக்க, கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.