தமிழ்நாடு

கமுதி அருகே எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு.. திருமணத்தை மீறிய உறவு காரணமா?

ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமுதி அருகே எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு.. திருமணத்தை மீறிய உறவு காரணமா?
SI Hacked with Machete Near Kamuthi
கமுதி அருகே உப்பங்குளம் கிராமத்தில், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) மீது இரு மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ மீது கொடூர தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகில் உள்ள பேரையூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் முருகன் (54). நேற்று இரவு சுமார் 10 மணியளவில், எஸ்.ஐ. முருகன் சாதாரண உடையில் பேரையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பங்குளம் கிராமம் அருகே தனியாகச் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென அவரை வழிமறித்துத் தாக்கியுள்ளனர்.

இந்தத் துணிகரத் தாக்குதலில் எஸ்.ஐ. முருகனின் தலையிலும் நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. அவர் சுதாரிப்பதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, முதுகுளத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திருமணத்தை மீறிய உறவு காரணமா?

காவல்துறையினர் இந்தத் தாக்குதல் குறித்து ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டத் தகவல்களின்படி, எஸ்.ஐ. முருகனுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

புகார் அளிக்காத எஸ்.ஐ.

தன்னையே குறிவைத்துத் தாக்கியவர்கள் குறித்து எஸ்.ஐ. முருகன் இதுவரை எந்தக் காவல் நிலையத்திலும் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயமாகும். இருப்பினும், காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். திருமணத்தை மீறிய உறவு விவகாரம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.