தமிழ்நாடு

74 வயது மூதாட்டியை விரட்டிவிட்ட மகன்…கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு

தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை

 74 வயது மூதாட்டியை விரட்டிவிட்ட மகன்…கண்ணீருடன் ஆட்சியரிடம் மனு
சொத்துக்களை வாங்கிக்கொண்டு மகன் வெளியேற்றிவிட்டதாக வயதான மூதாட்டி புகார்
கரூர் மாவட்டம், தென்னிலையை அடுத்த பெரிய திருமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி (வயது 74). இவருக்கு நல்லசிவம் என்ற ஒரே மகன் இருக்கிறார். இவர் 3 வயதாக இருக்கும் போதே இவரது தந்தை தங்கவேல் உயிரிழந்துவிட்டார். பரம்பரை விவசாய நிலத்தில் விவசாயம் செய்து தனது மகனை படிக்க வைத்து ஆளாக்கி திருமணமும் செய்து வைத்து விட்டார்.

தாயை வெளியேற்றிய மகன், மருமகள்

இந்நிலையில் தனது மகனும், மருமகளும் சேர்ந்து கொண்டு தன்னிடம் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 60 லட்சம் பணம், 41 லட்சம் விவசாய நிலத்தையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டனர்.

மேலும், தன்னுடைய ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி பாஸ்புக் மற்றும் லாக்கரையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால் வசிக்க வீடு மற்றும் உண்ண உணவு இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், உறவினர்கள் தங்கள் வீடுகளில் தங்க வைத்து உணவு கொடுத்து காப்பாற்றி வருவதாகவும், அவர்களையும் என் மகன் மற்றும் மைத்துனர் சேர்ந்து அவர்களை கொலை மிரட்டல் விடுகிறார் என மூதாட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

கண்ணீர் மல்க மூதாட்டி கோரிக்கை

இது தொடர்பாக சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது உறவினர்களுடன் வந்து மனு அளித்து விட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி, தனது உயிருக்கு பாதுகாப்பு அளித்து, தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு சொத்தில் பங்கு வழங்க ஆவணம் செய்ய வேண்டும். வசிக்க இடம், உண்ண உணவும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.