தமிழ்நாடு

சென்னையில் கார் மோதி மாணவர் உயிரிழப்பு- கொலையா? என விசாரணை

மாணவன் மீது திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

சென்னையில் கார் மோதி மாணவர் உயிரிழப்பு- கொலையா? என விசாரணை
கார் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவன்
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக்(20) மற்றும் நித்தின் சாய்(19) ஆகிய இரு நண்பர்களும், பள்ளி சாலையில் உள்ள பிரியாணி கடையில் நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

கார் மோதி மாணவர் பலி

குறிப்பாக திருமங்கலம் பள்ளி சாலையில் இருந்து பார்க் சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் கார் வேகமாக மோதியதால் அருகில் உள்ள பள்ளி சுற்றில் மோதி பைக்கில் சென்றவர்கள் விபத்துக்குள்ளானார்கள். இவர்களுடன் வந்த நண்பர்கள் விபத்து ஏற்படுத்திய காரை கல்லைக்கொண்டு தாக்கியுள்ளனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுள்ளது.

இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த நித்தின் சாய் என்ற முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பைக்கை ஒட்டிய அபிஷேக் என்ற மாணவன் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இந்நிலையில் கல்லூரி மாணவன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் காரை வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.