தமிழ்நாடு

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்

மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்
கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்
சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியீட்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டினை நாசப்படுத்திட புதியக் கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக கடுமையாக சாடினார்.

நாட்டில், குழந்தைகள் எந்த மொழியில் படிக்க வேண்டும், எந்த பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும் என்ற முடிவு, மாநில அரசுக்குத்தான் இருக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய பெட்டி அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

கல்வி நிதி தொடர்பாக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது திட்டவட்டமாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைசர் மு.க. ஸ்டாலின், “அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்வது திராவிட மாடல். இன்னார் மட்டும்தான் படிக்க வேண்டும் என்பது பாஜகவின் காவி மாடல் என்று விமர்சித்தார்.

நம்முடைய உயர்வுக்கும், நம்முடைய மேண்மைக்கும் கல்விதான் அடித்தளமாக இருக்கிறது. அறிவுதான் நமது ஆயுதம். கல்விக்கு தடை போட நினைக்கும் பாஜகவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு போர் வாள் சுழற்றுகிறது. தேசியக் கல்விக் கொள்கை இட ஒதுக்கீட்டை சிதைத்துவிடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரைதான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி கிடைக்கும்.

இந்த நிகழ்ச்சியில், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா, இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.