தமிழ்நாடு

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!

TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் சூடுபிடித்த டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு!
டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் ED ரெய்டு
தமிழகத்தில் டாஸ்மாக் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு தான் ரூ. 1000 கோடி முறைகேடு நிகழ்ந்து இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் உட்பட டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள், தனியார் மதுபான நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். ஆனால், சம்மனுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான விசாகனுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டும் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால், அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 12 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் தேனாம்பேட்டை, தி.நகர், மணப்பாக்கம், பட்டினப்பாக்கம், சூளைமேடு சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

குறிப்பாக, சென்னை போரூரை அடுத்த மணப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎப் படையினர் உதவியோடு சோதனையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே விசாகன் வீடு அருகிலேயே நகல் எடுக்கப்பட்ட Whatsapp chat screenshot நகல்கள் கிழித்து விட்டருகே போடப்பட்டது. மதுபான கொள்முதல், மதுபான டெண்டர் எடுப்பது, சில டாஸ்மாக் கடை தொடர்பாகவும், நீதிமன்றம் வழக்கு தொடர்பாக பரிமாறப்பட்ட Whatsapp chat Screenshot நகல்கள் கிழித்து போடப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் எல்லாம் கடந்த ஓராண்டிற்கு முன்னதாக உரையாடப்பட்டதாக தெரிகிறது. 20-க்கும் மேற்பட்ட பக்கங்கள் உள்ளன. விசாகன் வீட்டருகே கிடந்த Whats app chat screenshot நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து எடுத்துச்சென்றனர். அதனை ஆய்வு செய்து வருகின்றனர்.
அதைபோல சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் தேனாம்பேட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

இவருக்கு டாஸ்மாக் முறையீடு விவகாரத்தில் சட்டவிரோத பரிமாற்ற தொடர்பு உள்ளதா என அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கே ஸ்மார்ட் சொல்யூஷன் என்ற நிறுவனம் தொடர்பாகவும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இவை தமிழக அரசிடம் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. கேரள மாநில எலக்ட்ரானிக் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் பயன்படுத்தி பள்ளிக்கல்வித்துறையில் ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டம் தொடர்பாக 950 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி டெண்டர் பெற்றது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.

ஏற்கனவே டாஸ்மாக் எம்டி விசாகன் மற்றும் சில அதிகாரிகளுக்கு சமன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்தது ஆனால் உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முறையீடு மேற்கொள்ளப்பட்டது உயர் நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த சோதனை மீண்டும் நடைபெறுகிறது.

குறிப்பாக இந்த டாஸ்மாக் முறைகேட்டில் லஞ்சப்பணம் தரகர்கள் மூலமாக துணை மேலாளர்கள் மற்றும் மூத்த துணை மேலாளர்களுக்கு நெட்வொர்க் மூலம் பரிமாற்றப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

போலி ஆவணங்கள் போலி ரசீதுகள் மூலமாக டெண்டர்கள் பெறப்பட்டு நிதியை மோசடி செய்து போலி கம்பெனிகள் மூலமாக பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது குறிப்பாக சினிமாத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.