டெட் (TET) தேர்வு குறித்த சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், அதனைத் தான் பார்த்துக்கொள்வதாகவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியளித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற அடைவுத் தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவுத் தேர்வு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில், தென்காசியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று 38-வது மாவட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார். "ஆசிரியர்கள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளையும், பள்ளிக்கு வந்ததும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்களையும் தங்கள் சொந்தக் குழந்தைகள் போல் பேணிக்காப்பது அளப்பரிய பணி" என்று புகழாரம் சூட்டினார்.
சமீபத்தில் வெளிவந்த டெட் தேர்வு குறித்த நீதிமன்றத் தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்துப் பேசிய அமைச்சர், "டெட் தேர்வு குறித்த தீர்ப்பை நினைத்து யாரும் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம். அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஆசிரியர்களுக்கு உறுதியளித்தார். இதற்கிடையே, கூட்டத்தில் கலந்துகொண்ட சில தலைமை ஆசிரியர்கள் செல்போனைப் பார்த்துக்கொண்டே இருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.