சென்னை மேற்கு மாம்பலம் புஷ்பாவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விகாஷ் துக்காராம் சவான். இவர் சென்னை திநகரில் உள்ள பிரபல தங்க நகை கடையின் (GRT) கார்ப்ரேட் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
இவரது சகோதரர் பிரகாஷ் என்பவர் தி.நகர் போஸ்டல் காலனி பகுதியில் தங்க நகை பட்டறை வைத்துள்ளார். விகாஷ் தனது வேலையை முடித்து கிடைக்கும் சமயங்களில் சகோதரர் பிரகாஷின் நகை பட்டறைக்கு சென்று உதவி செய்து வருவது வழக்கம்.
இதற்கிடையில் விகாஷின் மனைவி பிரசவத்திற்காக மும்பை சென்று விட்டதால் அவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி தங்க நகை பட்டறைக்கு சென்ற விகாஷிடம் சகோதரர் பிரகாஷ் 134 கிராம் கொண்ட தங்கக் கட்டிகளை பையில் வைத்து கொடுத்துள்ளார்.
அதனை தன்னுடைய வீட்டில் கொடுத்து விடும் படி அனுப்பி வைத்துள்ளார். விகாஷ் நேரிடையாக சகோதரர் வீட்டிற்கு செல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்துள்ளார்.
பிறகு விகாஷிற்கு அவரது அண்ணி போன் செய்து சாப்பிட வரும்படி அழைத்துள்ளார். அப்போது தங்க கட்டி வைத்திருந்த பையை வீட்டில் மறந்து வைத்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. 14 ஆம் தேதி சகோதரர் பிரகாஷ் தங்க கட்டி பையை எங்கே என விகாஷிடம் கேட்ட போது தான் வீட்டிலேயே மறந்து வைத்தது தெரிந்தது. வீட்டிற்கு சென்று அவர் தேடி பார்த்ததும் அதனை காணவில்லை.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது வீட்டு பணிப்பெண்ணான மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த வசந்தா என்பவர் மட்டும் வீட்டிற்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது. இது குறித்து விகாஷ் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மேலும் பணிப்பெண்ணான வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் தான் திருடவில்லை என கூறியதாக தெரிகிறது. தங்க கட்டிகள் காணாமல் போன அடுத்த நாளில் இருந்து வசந்தா பணிக்கு வரவில்லை. இதனால் வசந்தாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.