தமிழ்நாடு

வைரமுத்துவின் தாயார் இறுதி ஊர்வலம்- அமைச்சர்கள் பங்கேற்பு

பெரியகுளம் அருகே வடுகப்பட்டி மின் மயானத்தில் கவிஞர் வைரமுத்து தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்றனர்.

வைரமுத்துவின் தாயார் இறுதி ஊர்வலம்- அமைச்சர்கள் பங்கேற்பு
vairamuthu mother funeral procession
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் பூர்வீக வீட்டில் கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாள் வசித்து வந்தார். 92 வயதான அங்கம்மாள் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று மாலை இயற்கை எய்தினார்.

இதனையடுத்து கவிப்பேரரசு வைரமுத்துவின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ”தமிழையும் அன்பையும் ஊட்டி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.


இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நடைப்பெறும் என வைரமுத்து தெரிவித்து இருந்தார். வடுகபட்டியில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அங்கமாளின் உடலுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, மலேசிய நாட்டின் முன்னாள் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் சரவணன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வைரமுத்துவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து தேனி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், அரசியல் கட்சி பிரமுகர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை 3 மணியளவில் மறைந்த அங்கம்மாளின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

வடுகபட்டியில் உள்ள அவரின் பூர்வீக இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள மின் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.