தமிழ்நாடு

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது

தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!
தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவு... காவல்துறை தகவல்!
தமிழகத்தில் சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில் காவல்துறை மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 9.11 சதவீதம் குறைந்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில், கடந்த ஆண்டு 10,792 சாலை விபத்து வழக்குகளில் 11,268 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு விபத்து வழக்குகள் 9,844 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,241 ஆகவும் குறைந்துள்ளது. மேலும், சாலை விபத்து உயிரிழப்பு வழக்குகள் 8.78 சதவீதம் குறைந்துள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நேர்மறையான மாற்றத்திற்குக் காரணமாக, 24 மணி நேரமும் நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுதல், சாலைகளை மேம்படுத்துதல், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல், போக்குவரத்து குறியீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது அபராதங்கள் விதிப்பதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 1,44,702 வழக்குகளும், சிக்னலை மீறியதாக 1,50,970 வழக்குகளும், செல்போன் பேசியதாக 2,40,285 வழக்குகளும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 1,41,883 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 36,39,007 பேர்மீதும், இருக்கை பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,20,608 பேர்மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்டவுடன் உயிர் காக்கும் நேரமான 'கோல்டன் ஹவர்ஸ்'-க்குள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியிலும் காவல்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 6,804 நபர்கள் காவல்துறை ரோந்து வாகனங்களின் உதவியால் உயிர் காக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விழிப்புணர்வு ஒன்றே விபத்துகளைக் குறைக்கும் என்ற அடிப்படையில், இந்த ஆண்டு 18,630 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.