தமிழ்நாடு

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!
அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் டெல்லி செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

"இந்தியாவிற்கு அமெரிக்காவும், அமெரிக்காவிற்கு இந்தியாவும் தேவை. அதனால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. டிரம்ப் ஒரு வழக்கமான அரசியல்வாதி அல்ல. அமெரிக்கா ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வது போல, இந்தியாவும் அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளைப் பேச்சுவார்த்தைமூலம் வலுப்படுத்த வேண்டும். வரி விகிதங்களைப் பேசிக் குறைக்கலாம். பொறுப்புடன் செயல்பட்டு தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்," என்று அவர் கூறினார்.

மோடிக்கும் டிரம்ப்புக்கும் இடையே எந்த உறவும் இல்லை என்றும், பாஜக தலைவர்களுக்கு வெளிநாட்டுத் தலைவர்களிடம் எப்படிப் பேசிக் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம்மீது அதிருப்தி

தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் வலியுறுத்தினார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கத் தெரியாமல் மழுப்புகிறது. மேலும், ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் அல்லது உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறுவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் விமர்சித்தார்.

"தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து உறுதிமொழி எடுக்கச் சொல்வது ஏற்புடையது அல்ல. பெங்களூரில் ஒரே வீட்டில் 80 பேர் இருப்பது, வீட்டு எண் பூஜ்ஜியத்திலும் வாக்காளர்கள் இருப்பது போன்ற குளறுபடிகளை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இதற்குத் தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும். இதைச் சரி செய்யாமல், எங்களிடம் ஆவணங்களைக் கேட்பது சரியல்ல. தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்படவில்லை என்றால், போராட்டம் தொடரும்," என்று அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் வாக்காளர்கள்:

பீகாரிலிருந்து தமிழகத்திற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தமிழக வாக்காளர் பட்டியலின் தன்மையை மாற்றிவிடும் என்று கார்த்திக் சிதம்பரம் கவலை தெரிவித்தார்.

"பீகாரைச் சேர்ந்த ஆறரை லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகத்திற்கு வேலைக்காக வருபவர்கள் நிரந்தரமாக இங்கே வசிப்பதில்லை. அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தவறான செயல். இது போன்று லட்சக்கணக்கில் மற்ற மாநிலத்தவர்களைச் சேர்த்தால் தமிழகத்தின் வாக்காளர் பட்டியலின் தன்மை மாறிவிடும்," என்று அவர் கூறினார்.