தமிழ்நாடு

வாட்டர் மெலன் ஸ்டாருக்கு சிக்கல்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஷகீலா புகார்!

இன்ஸ்டா பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வாட்டர் மெலன் ஸ்டாருக்கு சிக்கல்.. கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஷகீலா புகார்!
Actress Shakeela files complaint against Instagram celebrity Diwakar
திருநெல்வேலியில் நடந்த ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் வகையிலும், யூடியூப் பிரபலம் ஜி.பி.முத்துவின் சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும் இன்ஸ்டாகிராம் பிரபலம் திவாகர் மீது நடிகை ஷகீலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் திவாகர்

நடிகை ஷகீலா அளித்த புகார் மனுவில், “கடந்த ஜூலை 27-ஆம் தேதி, திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திவாகர் யூடியூப் சேனல்களுக்குப் பேட்டி அளிக்கும்போது, "சுர்ஜித் என்பவர் என்னுடைய சமூகத்தைச் சார்ந்தவர்" என்று வெளிப்படையாகத் தனது சமூகத்தைக் குறிப்பிட்டு, இந்தக் கொலையை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

ஜி.பி.முத்து பற்றிய விமர்சனம்

இதேபோல், மற்றொரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளிக்கும்போது, நெறியாளர் ஜி.பி.முத்து பற்றி கேள்வி கேட்டதற்கு, திவாகர், "ஜி.பி.முத்துவின் சமூகத்தைக் குறிப்பிட்டுப் பேசுவதால், தன்னுடைய தரத்தைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை" என்று கூறியுள்ளார்.

சட்ட நடவடிக்கை கோரிக்கை

திவாகர் வெளிப்படையாகத் தனது சமூகத்தை உயர்ந்ததாகவும், பிற சமூகத்தினரைத் தாழ்ந்தவர்களாகவும் பேசி வருகிறார். எனவே, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் திவாகர் மீது, SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.