தமிழ்நாடு

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட குரங்கு குட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அவற்றை திரும்பி அனுப்பி வைத்தனர்.

விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!
விமானத்தில் வனவிலங்கு கடத்தல்: சுங்கத்துறை அதிரடி நடவடிக்கை!
சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலை நகர் பாங்காக்கிலிருந்து வரும் விமானத்தில் வனவிலங்குகளை கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தாய்லாந்தில் இருந்து வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சுற்றுலாவில் சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த வாலிபரை தடுத்து நிறுத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை பரிசோதனை செய்தனர்.

அவரது டிராலி பையைத் திறந்தபோது சாக்லேட்டுகள், பிற உணவு பொருட்களுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிறிய துணிப் பையைக் கண்டனர். காற்றோட்டமான பைகளுக்குள் அசைவுகள் காணப்பட்டன. மேலும் பையை பிரித்து பார்த்த போது, வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 2 உயிருள்ள கிப்பான் குரங்குகள், ஒவ்வொன்றும் தனித்தனியாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.

உரிய அங்கீகாரம் இல்லாமல் வனவிலங்குகளை இறக்குமதி செய்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களில் சர்வதேச அமைப்பின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட குரங்கு குட்டிகள் மீண்டும் தாய்லாந்திற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட்டன. வனவிலங்குகளை கடத்தி வந்த வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.