தமிழ்நாடு

வங்கியில் தங்கத்தை விட்டுச் சென்ற பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் தங்கத்தை விட்டு சென்ற பர்தா பெண் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வங்கியில் தங்கத்தை விட்டுச் சென்ற பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
Woman left gold in the bank
சென்னை வேளச்சேரியில் உள்ள எச்டிஎஃப்சி வங்கியில் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், சுமார் 1.25 கிலோ தங்க நகைகளை இருக்கையில் மறந்து வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் ஏற்கனவே வங்கி லாக்கர் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் வங்கி மேலாளர் என்பது தெரியவந்துள்ளது.

வங்கியில் நடந்த பரபரப்பு சம்பவம்

கடந்த 5-ஆம் தேதி, சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள எச்டிஎஃப்சி வங்கிக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் தன்னை ஷர்மிளா பானு என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது கணவர் இந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதாகவும், தானும் லாக்கர் வசதி குறித்துத் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும் ஊழியர்களிடம் கூறியுள்ளார். வங்கியின் ரிலேஷன்ஷிப் மேலாளர் வெளியே சென்றதால், ஊழியர்கள் அவரை 15 நிமிடங்கள் காத்திருக்குமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, வங்கி கணக்கு துவங்குவதற்கான ஆவணங்கள் எடுத்து வராததைக் காரணம் காட்டி, அந்தப் பெண் பின்னர் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

நாற்காலியில் கண்டெடுக்கப்பட்ட நகைகள்

அந்தப் பெண் அமர்ந்திருந்த நாற்காலியில், அவர் தனது பர்ஸை மறந்துவிட்டுச் சென்றது தெரியவந்தது. உடனடியாக வங்கி ஊழியர்கள் அந்தப் பர்ஸைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ தங்கக் கட்டியும், வளையல்கள், ஆரம் என 256 கிராம் தங்க நகைகளும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவை உண்மையான தங்க நகைகள் என்பது தணிக்கையில் உறுதியானதைத் தொடர்ந்து, நகைகளை வங்கியிலேயே பத்திரமாக வைத்திருந்தனர். கடந்த நான்கு நாட்களாக அந்த நகைகளைக் கோரி யாரும் வங்கிக்கு வராததால், வங்கி அதிகாரி அகமத் வேளச்சேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்தார்.

விசாரணையில் சிக்கிய முன்னாள் மேலாளர்

புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். நகைகள் சரியான முறையில் கிடைத்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், பர்தா அணிந்து வந்தது ஏற்கனவே இதே வங்கியில் மேலாளராகப் பணியாற்றிய பத்மபிரியா என்பது தெரிந்தது.

அவரைப் பிடித்து போலீசார் விசாரித்ததில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியானது. பத்மபிரியா அங்கு பணியாற்றிய சமயத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியரின் வங்கி லாக்கரில் இருந்த லட்சக்கணக்கான தங்கத்தை திருடிய வழக்கில், அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

தங்கத்தை திருப்பி வைக்கத் திட்டம்

சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த பத்மபிரியா, வேறு சில வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வங்கி லாக்கரில் இருந்து திருடிய தங்க நகைகளை மீண்டும் அதே வங்கி லாக்கரில் வைக்கத் திட்டமிட்டதாகத் தெரிகிறது. ஏனென்றால், அடுத்த வேறு ஏதேனும் வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காகத் திருடிய நகைகளை யாருக்கும் தெரியாமல் வைத்துவிடலாம் என அவர் நினைத்துள்ளார். அதன்படி தங்க நகைகளோடு பர்தா அணிந்து வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஆவணங்களைக் கேட்டதால், அதனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் பத்மபிரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.