தமிழ்நாடு

“பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற முடியாது” -சென்னை காவல் ஆணையர் அருண்

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டும் வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறமுடியாது எனவும் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைந்துள்ளதாக காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

 “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூற முடியாது” -சென்னை காவல் ஆணையர் அருண்
சென்னை காவல் ஆணையர் அருண்
இது சமூகத்திற்கு தான் கேடு

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உணவு விடுதியை சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், “பிரஸ் கிளப்பில் உணவு விடுதியை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி, இந்த மாதத்தில் இரண்டாவதாக உணவு விடுதியை திறந்து வைக்கிறேன்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் முதலாவதாக விடுதியை துவங்கி வைத்தேன், தற்போது இரண்டாவதாக பிரஸ் கிளப்பில் திறந்து வைக்கிறேன்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் உணவகம் சரியில்லை என புகார் வந்தது, தற்போது காவலர்கள் இணைந்து மிகக்குறைவாக விலையில் உணவு வழங்குகிறோம். ஆனால் எங்களை விட விலை குறைவாக பிரஸ் கிளப்பில் உள்ள உணவகத்தில் உணவு வழங்குவது ஆச்சரியமாக உள்ளது, தரமும் நன்றாக உள்ளது. பத்திரிக்கையாளர்ளுக்கு சுதந்திரம் உள்ளது, பொதுமக்கள் நன்மைக்காக பேசும்போது பிரீடம் ஆப் ஸ்பீச் உள்ளது. ஆனால் பிரீடம் ஆப் abuse நிறைய நடப்பதாகவும், செய்த தவறை விடுத்து ஒரு நபரை சுட்டிக்காட்டி பேசுவது தவறு எனவும் இதனால் பல நல்ல அதிகாரிகள் நல்லது செய்ய முன்வர பயப்படுவதாகவும், இது சமூகத்திற்கு தான் கேடு எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூற முடியாது

காவல்துறையில் பெண்கள் அதிகப்படியாக பணிபுரிகிறார்கள், ஆனால் ஜர்னலிசத்தில் பெண்களின் பங்கு குறைவாக உள்ளது. பெண்களால் ஏன் ஆண்களுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என யோசித்து பார்த்து முடிவு எடுங்கள் என அவர் தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை எந்தவிதமான குறிப்பிட்ட மிரட்டல்களும் இல்லை, இருப்பினும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டார்க் வெப் மூலமாக இமெயில் வருவதால் சவாலாக உள்ளது, ஆனால் அது வெறும் வதந்தி என கண்டறிகிறோம். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை மட்டுமே வைத்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறமுடியாது. பெண்களுக்கு எதிரான குற்றம் குறைந்துள்ளது. அதன் பிறகு நிறைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.