சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு நின்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரில் நடந்த இந்த கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முதற்கட்டமாக புன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியுமான வழக்கறிஞர் மலர்கொடி, திமுக இலக்கிய அணியின் துணை அமைப்பாளரான குமரேசனின் மகன் சதீஷ், மேலும் பிரபல பெண் ரவுடியும், முன்னாள் வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி செயலாளருமான புளியந்தோப்பு அஞ்சலை என அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோல் ஏராளமான வழக்கறிஞர்களும் கைதாகி வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 200 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலை கும்பலுக்கு நிதி உதவி, சட்ட உதவி் என பக்கபலமாக இருந்தது பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா மற்றும் சிறையில் இருக்கும் மற்றொரு ரவுடி என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வடமாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என இருப்பிடத்தை மாற்றி வருவதால் சம்போ செந்திலை பிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அவரை தேடி தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் சிறையில் இருக்கும் செந்திலின் கூட்டாளி ஈசாவை கட்டிட ஒப்பந்தக்காரர் கார்த்திக்கை மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரித்துள்ளனர்.
சம்போ செந்திலின் நெட்வொர்க் என்ன? ஈசா அவரை சந்திக்கும் இடம், சென்னையில் அவருக்கு யார் யாரெல்லாம் மாமூல் வசூலித்து கொடுப்பவர்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலையில் எந்தெந்த ஊரை சேர்ந்த கூலிப்படை கும்பல்களுக்கு தொடர்பு உள்ளது? என ஈசாவிடம் துருவித் துருவி விசாரணை நடந்துள்ளது. இதேபோல் சேலம் மத்திய சிறையில் இருக்கும் சம்போ செந்திலின் மற்றொரு கூட்டாளியான எலி யுவராஜையும், கட்டிட காண்ட்ராக்டர் கார்த்திகை மிரட்டி பணம் பறித்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.