தமிழக பட்ஜெட் 2026

வேளாண் இடைக்கால பட்ஜெட் 2026: 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!

சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் இடைக்கால பட்ஜெட் 2026: 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!
Agriculture Interim Budget
இன்று காலை சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வேளாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் பச்சை நிறத் துண்டு அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வேளாண் பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கடந்த நான்கரை ஆண்டுகளில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், நிதி ஒதுக்கீடுகளையும் பட்டியலிட்டார்.

அதிகரித்த விளைநிலங்கள் மற்றும் மண் வளம்

அரசின் தொடர் முயற்சியால் தமிழகத்தில் வேளாண் பரப்பு சுமார் 3 லட்சம் ஏக்கர் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்' கீழ் 61 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் மூலம் ரூ.178 கோடி செலவில் மண் வளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 58,000 ஏக்கருக்கும் அதிகமான தரிசு நிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டு உணவு உற்பத்திக்கு வழிவகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுதானிய இயக்கம் மற்றும் பாரம்பரிய விதை பாதுகாப்பு

சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 'நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்' மூலம் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, 70,000 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கக் கோவையில் நம்மாழ்வார் பெயரில் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு

எண்ணெய் வித்து பரப்புகளை அதிகரிக்க ரூ.229 கோடியும், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகளை வழங்க 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் பாதிப்புகளைத் தடுக்கவும், விரைவில் புதிய 'வேளாண் காடுகள் கொள்கை' வெளியிடப்பட உள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மைத் துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ. 1,94,076 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

கடந்த ஐந்து மாநிலத்தின் தனித்துவமான ஆண்டுகளில், விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 41 விளைபொருள்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது, மீதமுள்ள 32 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனது உரையில் தெரிவித்தார்.