உலகம்

"எலும்பு முறிவு இல்லாத தாக்குதல் குற்றமல்ல"- ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Taliban law in Afghanistan
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாலிபான் அமைப்பின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா அண்மையில் புதிய சட்டத் தொகுப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இந்தச் சட்டம், 2009-ஆம் ஆண்டு பெண்களின் பாதுகாப்புக்காகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களை ரத்து செய்வதுடன், குடும்ப வன்முறைக்குச் சாதகமான பல அம்சங்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூகப் பிரிவுகளும் தண்டனை முறைகளும்

புதிய சட்டத்தின் 9-வது பிரிவின்படி, ஆப்கான் சமூகம் மதம், உயர்குடி, நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு குற்றத்திற்கான தண்டனை என்பது, அந்தக் குற்றத்தைச் செய்தவர் எந்தச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்தே இனி தீர்மானிக்கப்படும்.

வன்முறை தொடர்பான நிபந்தனைகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்து இந்தச் சட்டம் சர்ச்சைக்குரிய விளக்கங்களை அளித்துள்ளது. அதன்படி, ஒரு ஆண் தனது வீட்டில் உள்ள பெண்ணையோ அல்லது குழந்தையையோ தாக்கும்போது, எலும்பு முறிவு ஏற்படாமலோ அல்லது இரத்தம் வராமலோ இருந்தால், அது குற்றமாகக் கருதப்படாது. ஒருவேளை பலத்த காயங்கள் ஏற்பட்டு, அதை ஒரு பெண் நீதிமன்றத்தில் நிரூபித்தாலும், சம்பந்தப்பட்ட கணவருக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

நீதிமன்றக் கட்டுப்பாடுகள் மற்றும் சிறைத்தண்டனை

பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி கோரி நீதிமன்றத்திற்குச் செல்வதிலும் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒரு பெண் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டுமானால், அவருடன் கண்டிப்பாக ஒரு ஆண் துணையாக வர வேண்டும். நீதிபதியிடம் தனது காயங்களை ஆதாரமாகக் காட்டும்போது கூட, உடல் முழுவதையும் மூடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கணவனின் அனுமதி இன்றி உறவினர் வீட்டுக்குச் செல்லும் பெண்களுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்தச் சட்டம் தெரிவிக்கிறது.

இந்த புதிய சட்டத் தொகுப்பு பெண்களைப் பாதுகாப்பு அற்ற நிலைக்குத் தள்ளுவதுடன், அவர்களைச் சமூகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.