உலகம்

அதிபர் ட்ரம்புடன் பேச ஆவலுடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி பதில்!

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

அதிபர் ட்ரம்புடன் பேச ஆவலுடன் இருக்கிறேன்- பிரதமர் மோடி பதில்!
PM Modi and President Donald Trump
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் மோடி, "அதிபர் ட்ரம்புடன் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் பதற்றம் நிலவி வந்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்தது. அத்துடன், மறு உத்தரவு வரும் வரை இந்தியாவுடன் எந்தவொரு வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று அப்போதைய அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க விருப்பம் கோரி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்ததற்கு, பிரதமர் நரேந்திர மோடி நேர்மறையாக பதிலளித்துள்ளார்.

அதிபர் ட்ரம்பின் இணக்கமான நிலைப்பாடு

அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில், "நமது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன். நமது இரு பெரிய நாடுகளுக்கும் இடையில் ஒரு வெற்றிகரமான முடிவு கிடைப்பதில் எந்த சிரமமும் இருக்காது என்று உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் பதில்

இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியா மற்றும் அமெரிக்கா நெருங்கிய நண்பர்கள் மற்றும் இயல்பான கூட்டாளிகள். எங்கள் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், இந்தியா-அமெரிக்கா கூட்டாண்மையின் எல்லையில்லா ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு வழி வகுக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர எங்கள் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. அதிபர் ட்ரம்புடன் பேசுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன். நமது இரு நாட்டு மக்களுக்கும் பிரகாசமான, வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க நாம் இணைந்து செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு, இந்தியாவின் பொருளாதாரத்தை "செத்துப்போன பொருளாதாரம்" என்று விமர்சித்திருந்த ட்ரம்ப், தற்போது "எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடன் பேச நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.