உலகம்

“இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும்”- ரஷ்யா விளக்கம்!

எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது ரஷியா தெரிவித்துள்ளது.

“இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும்”- ரஷ்யா விளக்கம்!
Russia
இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்தியாவுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அத்துடன், ரஷியா கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதாகவும், அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்திருப்பதாகவும் டிரம்ப் அறிவித்திருந்தார். அதேபோல், "அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் இந்தியா பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என ரஷிய அதிபர் மாளிகையில் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் வழங்குவது ரஷியா மட்டுமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். பிற நாடுகளிடம் இருந்தும் இந்த பொருள்களை இந்தியா கொள்முதல் செய்து வருகின்றது. எனவே, இதில் நாங்கள் புதிதாக எதையும் காணவில்லை.

இந்தியா தான் விரும்பும் எந்த நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய முழு சுதந்திரம் உள்ளது. எனினும், ரஷிய எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்தியாவிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் மாஸ்கோவுக்கு வரவில்லை” எனத் தெரிவித்தார்.