உலகம்

உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா? வெளியான சர்வே ரிப்போர்ட்..!

உலக மக்கள் தொகையில் அதிகளவில் இருந்த கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையானது பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகரித்துள்ளதாகவும் சர்வே ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..! குறைந்த கிறிஸ்துவர்கள்..! இந்துக்கள் எவ்வளவு தெரியுமா?  வெளியான சர்வே ரிப்போர்ட்..!
உலகளவில் அதிகரித்த இஸ்லாமியர்கள்..வெளியான சர்வே ரிப்போர்ட்..!
அமெரிக்காவின் வாஷிங்டனைச் சேர்ந்த ‘பியூ’(PEW) என்ற ஆய்வு அமைப்பானது கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் உலக அளவில் வளர்ந்துள்ள மற்றும் குறைந்துள்ள மதத்தினரின் மக்கள் தொகை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில், இஸ்லாமிய மதத்தினரின் மக்கள் தொகை மற்ற அனைத்து மதங்களை காட்டிலும் வேகமாக வளர்ச்சி அடைந்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவர்களை பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய மதக் குழுவாகவே இருக்கின்றனர். ஆனால், 2010 முதல் 2020 வரையிலான உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ஒரே குழுவாகக் கணக்கிடப்பட்ட நிலையில், கிறிஸ்தவர்கள் வளர்ச்சி என்பது குறைவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 122 மில்லியன் அதிகரித்து 2.3 பில்லியனை எட்டியபோதும், உலக மக்கள்தொகையில் கிறிஸ்தவர்களின் விகிதம் 1.8 சதவீத புள்ளிகள் குறைந்து 28.8% ஆக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களை பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாக இருக்கின்றனர். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 347 மில்லியன் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மற்ற அனைத்து மதங்களையும் விடவும் அதிகம். உலக மக்கள்தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு 1.8 புள்ளிகள் அதிகரித்து 25.6% ஆக உயர்ந்துள்ளது.

பௌத்தர்களை பொறுத்தவரை, ஒரு தசாப்தத்திற்கு முந்தைய காலத்தை விட 2020 ஆம் ஆண்டில் குறைவான மக்களைக் கொண்ட ஒரே பெரிய மதக் குழுவாக உள்ளது. உலகளவில் பௌத்தர்களின் எண்ணிக்கை 19 மில்லியன் குறைந்து 324 மில்லியனாகக் குறைந்துள்ளது. உலக மக்கள்தொகையில் ஒரு பங்காக பார்த்தோமானால், பௌத்தர்கள் எண்ணிக்கை 0.8 புள்ளிகள் குறைந்து 4.1% ஆக உள்ளது.

எந்த மதத்தையும் சாராத அல்லது மதத்தை குறிப்பிட விரும்பாதவர்கள் எண்ணிக்கையானது இஸ்லாமியர்களை போலவே அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களின் பங்கு கிட்டத்தட்ட 24.2% ஆக உயர்ந்துள்ளது.

இந்துக்களை பொறுத்தவரை, உலக மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதத்தைப் போலவே இந்துக்களின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் எண்ணிக்கை 126 மில்லியன் அதிகரித்து 1.2 பில்லியனை எட்டியுள்ளது. மேலும், உலக மக்கள்தொகையில் இந்துக்களின் விகிதம் 14.9% ஆக நிலையானதாக இருக்கிறது.

அதேபோல, உலக மக்கள்தொகையில் யூதர்களின் பங்கும் நிலையானதாக இருந்துள்ளது. உலகளவில் யூதர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 மில்லியன் அதிகரித்து, 14.8 மில்லியனை எட்டியதாகக் கூறப்படுகிறது. உலக மக்கள் தொகை சதவீத அடிப்படையில், யூதர்கள் மிகச்சிறிய குழுவாக இருப்பதோடு, இது உலக மக்கள்தொகையில் சுமார் 0.2% ஆக இருக்கிறது.

பஹாய்கள், தாவோயிஸ்டுகள், சமணர்கள், சீக்கியர்கள், நாட்டுப்புற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் ஏராளமான பிற குழுக்கள் உட்பட மற்ற அனைத்து மதங்களும் உலகின் பிற பகுதிகளுடன் இணைந்து விரிவடைந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலக மக்கள்தொகையில் அவர்களின் பங்கு 2.2% ஆக நிலையானதாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி உலக மக்களில் 75.8% பேர் மட்டுமே மதத்துடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24.2% பேர் எந்த மதத்துடனும் அடையாளம் காணப்படவில்லை, இதனால் மத சார்பற்றவர்கள் எண்ணிக்கை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பிறகு மூன்றாவது பெரிய குழுவாக உள்ளனர்.

மதசார்பற்றவர்களின் வளர்ச்சி என்பது இந்த ஆய்வின் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களில் குறிப்பிடத்தகுந்த சதவித்ததினர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து மாறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.