உலகம்

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!

நியூயார்க்கில் பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. மருத்துவருக்கு 24 ஆண்டுகள் சிறை!
Doctor sentenced to 24 years in prison
நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஒரு மருத்துவருக்கு, 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவியில் சிக்கிய மருத்துவர்

ஷி ஆலன் செங் (35) என்ற அந்த மருத்துவர், நியூயார்க்-பிரஸ்பைடீரியன் குயின்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்தவர். இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஒரு பெண் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர், அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அந்த பெண் ஒரு நாள் தனது வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது, மருத்துவர் செங் தனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் செங் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் வெளியான தகவல்

இதைத்தொடர்ந்து, போலீசார் செங்கின் வீடு மற்றும் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவைகளை சோதனை மேற்கொண்டபோது, அவர் தனது வீடு மற்றும் மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன. மேலும், மயக்க மருந்தும் பெருமளவு கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர் செங்கிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவரிடம் சிகிச்சை பெற வந்த 7பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் மயக்க நிலையில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான எந்த நினைவும் அவர்களுக்கு இல்லை.

நீதிமன்றம் தீர்ப்பு

இதையடுத்து, மருத்துவர் செங் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீறணிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பின் மூலம் செங், மருத்துவ சேவை செய்வதிலிருந்து நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்தச் சம்பவம் குறித்த குற்றவியல் விசாரணை முழுமையாக முடிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.