சினிமா

'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!
JanaNayagan
விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த புதிய தகவல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன.

விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் 'ஜனநாயகன்' படம் எப்போது வெளியாகும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக, திட்டமிட்டபடி குறிப்பிட்ட தேதிகளில் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது. விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி அன்றாவது படம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது சினிமா வட்டாரங்களில் கசிந்துள்ள தகவலின்படி, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தமிழ் பதிப்பிற்குத் தணிக்கைக் குழு 'ஏ' (A Certificate) சான்றிதழ் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தை இந்த மாதமே (ஜூலை) 16 அல்லது 23 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற மொழிகளுக்கான சென்சார் நடைமுறைகள் நிறைவடைய இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்பதால், அது முடிந்த உடனேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சென்சார் சான்றிதழ் மற்றும் இறுதி வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.