இந்தியா

"அது எப்படி திமிங்கலம்.." ரஷ்யாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு!

பீகாரில் நடைபெற்ற நீட் வினாதாள் கசிவு போராட்டம் தொடர்பாக ரஷ்யாவில் வசித்து வரும் இந்திய இளைஞர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


NEET paper leak protest FIR
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக கடந்த வாரம் பீகாரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, கடந்த நான்கு மாதங்களாக வெளிநாட்டில் வசித்து வரும் தன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கிஷன்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முகமது சதாகத் என்பவர் ரஷ்யாவிலிருந்து வெளியிட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தான் கடந்த நான்கு மாதங்களாக ரஷ்யாவில் வசித்து வரும் நிலையில், ஜூலை 25 அன்று பீகாரின் பகதூர் கஞ்சில் நடைபெற்ற போராட்டத்தில் எவ்வாறு பங்கேற்றிருக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி, முதல் தகவல் அறிக்கையிலிருந்து (FIR) தனது பெயரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய கிஷன்கஞ்ச் எஸ்பி ஹரி மோகன் சுக்லா, குற்றச்சாட்டைப் பற்றி நேரடியாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. எனினும், போராட்டம் தொடர்பான புகார்கள் இருப்பவர்கள் காவல்துறையை அணுகித் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

போராட்டம் தொடர்பாகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவதாகவும், கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்வதாகவும் பீகார் அரசு அறிவித்துள்ள சூழலிலேயே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூலை 26 காலை 6 மணிக்கு முன்பாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாகப் பதியப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர் மற்றும் நோட்டீஸ்களைத் திரும்பப் பெறுவதாக அம்மாநில உள்துறை அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக அழைப்பு விடுக்கப்பட்ட பந்த் போராட்டத்தின் போது, சிறுவர்கள் உட்படச் சுமார் 694 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.