இந்தியா

"முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம்"- பவன் கல்யாண் வேண்டுகோள்!

கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் முதலமைச்சரானதாக விஜயுடன் தன்னை ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.


CM Vijay and Pawan Kalyan
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம்108 இடங்களைக் கைப்பற்றி, எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகக் குறுகிய காலத்தில் புதிய கட்சி ஒன்று ஆட்சியைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது. இச்சூழலில், தவெக தலைவர் விஜய்யுடன் தன்னை ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் வெளியாகும் கருத்துகளுக்கு ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் விளக்கம் அளித்துள்ளார்.

கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே விஜய் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து, பக்கத்து மாநிலமான ஆந்திராவில் கட்சி தொடங்கி, தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் நடிகர் பவன் கல்யாணுடன் விஜய்யைச் சமூக ஊடகங்களில் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர். இதற்கிடையில், மங்களகிரியில் நடைபெற்ற ஜனசேனா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், இந்த ஒப்பீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அரசியல் சூழல் மாறுபட்டது

ஆந்திராவின் அரசியல் சூழலும் தமிழ்நாட்டின் அரசியல் சூழலும் முற்றிலும் மாறுபட்டவை என்று பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். "எல்லோரும் என்னைக் கைவிட்டபோதும் நான் கட்சியை முன்னோக்கி எடுத்துச் சென்றேன். ஜனசேனா என்பது இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அல்ல; பல்வேறு சித்தாந்தங்களின் நல்ல கூறுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சி" என்று அவர் விவரித்தார்.

"விஜய்யுடன் ஒப்பிட வேண்டாம்"

தான் முதலமைச்சர் ஆவதற்காகவோ அல்லது பதவிகளை அனுபவிப்பதற்காகவோ கட்சியைத் தொடங்கவில்லை என்று கூறிய பவன் கல்யாண், "2008-ஆம் ஆண்டிலிருந்தே கட்சியை எப்படி நடத்துவது என்று திட்டமிட்டு வருகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக எனக்குள் கனன்று கொண்டிருந்த எண்ணமே ஜனசேனா" என்று தெரிவித்தார். மேலும், தாங்கள் பிரச்சாரம் செய்த பிற மாநில இடங்களிலும் என்.டி.ஏ வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற ஒப்பீடுகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.