இந்தியா

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !
ஜெய்ப்பூரின் கர்னி விஹார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி பாதை பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானது. கட்டுமானத்தில் இருந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சுனிதா தேவி, அனுதி குமாரி மற்றும் பிரதிமா குமாரி ஆகிய மூன்று பெண் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து கர்னி விஹார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமானப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், தளப் பொறுப்பாளர் மற்றும் பிறரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.