அரசியல்

மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!

சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரில் ஐடி அதிரடி: திமுக வேட்பாளர் உதவியாளர் வீட்டில் ரூ.79 லட்சம் பறிமுதல்!
DMK Candidate
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், சென்னையில் திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளரின் உதவியாளரான சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டின் பிற பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தையும் கண்டுபிடித்தனர். தற்போது வரை மொத்தம் ரூ.78,93,500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணப் பட்டுவாடா ஆவணங்கள் சிக்கின

பணம் பறிமுதல் செய்யப்பட்டது மட்டுமின்றி, அந்த வீட்டில் சுமார் ரூ.2 கோடி வரை வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததற்கான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மயிலாப்பூர் தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி நேரடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்குச் சரியாக ஒருநாள் முன்னதாக இவ்வளவு பெரிய தொகை மற்றும் ஆவணங்கள் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிரமடையும் விசாரணை

வருமான வரித்துறையினரும் தேர்தல் பறக்கும் படையினரும் இணைந்து சத்தியமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பணம் யாருக்காகக் கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.