அரசியல்

"நோ காம்ப்ரமைஸ்.." புதிய கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை வெளியாகும் அறிவிப்பு?

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Annamalai
பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும், அவர் புதிய கட்சி தொடங்குவதில் இறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, கட்சியில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் கட்சியை விட்டு விலகப் போவதாகப் பரவிய தகவல் தற்போது தீவிரமடைந்துள்ளது.

டெல்லி சென்ற அண்ணாமலை, தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து, தான் விலகுவதற்கான காரணங்கள் அடங்கிய 5 பக்கக் கடிதத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துத் தனது முடிவு குறித்து அவர் பேசியதாகத் தெரிகிறது. எனினும், தனது ராஜினாமா கடிதத்தில் அவர் யார் மீதும் எவ்வித புகாரும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

டெல்லி விரைந்தார் நயினார் நாகேந்திரன்

அண்ணாமலையின் இந்த திடீர் ராஜினாமா முடிவு குறித்து விவாதிக்க, தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வருமாறு தேசியத் தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் டெல்லி விரைந்துள்ளார். அவருடன் நடத்தப்படும் ஆலோசனைக்குப் பிறகே, அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து டெல்லி தலைமை இறுதி முடிவு எடுக்கும் எனக் கூறப்படுகிறது.

முடிவில் மாற்றமில்லை: புதிய கட்சி அறிவிப்பு?

மறுபுறம், தேசியத் தலைவர்களைச் சந்தித்த போதிலும் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய கட்சி தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் நாளை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அடுத்த சில மாதங்களில் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.