அரசியல்

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி & டி.ஆர்.பாலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் முறைகேடு: செந்தில் பாலாஜி & டி.ஆர்.பாலுவுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு!
DVAC Raid
திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை கொள்முதல் செய்ததில் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் பண வசூல் செய்யப்பட்டு பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், அவரது உதவியாளர்களான சுப்பிரமணி, பாஸ்கரன் மற்றும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனைகள் தொடர்கின்றன.

அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கர்ணாவூரில் அமைந்துள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையிலும் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் வீடுகளிலும் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.