அரசியல்

"அவருக்கு கொஞ்சம் சொல்லி குடுங்க"- உதயநிதியை வம்புக்கு இழுத்த அமைச்சர்.. சட்டப்பேரவையில் சலசலப்பு!

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அமைச்சர் ரமேஷ் பேசிய கருத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


Minister Ramesh
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விவாதங்களின் போது, முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழையும் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது தொடர்பாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பியது பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் முதலமைச்சரும் திமுக எம்.எல்.ஏ-வுமான ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையின் கண்ணியம் குறித்து அவையில் பேசினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரமேஷ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறிய அறிவுரையை முதல்முறை உறுப்பினர்களான நாங்கள் கற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அவையின் கண்ணியத்தை முதலில் எதிர்க்கட்சித் தலைவருக்குத் தான் கற்றுத்தர வேண்டும். 8 கோடி மக்களின் பிரதிநிதியான முதலமைச்சர் விஜய் பேரவைக்குள்ளே வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருக்கலாமா? அவருக்கு முதலமைச்சருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்ற கண்ணியத்தை சொல்லித் தர வேண்டும்" என்று சாடினார்.

அமைச்சர் ரமேஷின் இந்தப் பேச்சுக்குத் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சலிட்டனர். இதையடுத்துத் தலையிட்ட அவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், "முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டுமா, கூடாதா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கே.என். நேரு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவைக்குள் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்றதில்லை சுட்டிக்காட்டினார். மேலும், "இது அவரவர் பின்பற்றும் நடைமுறை சார்ந்த விஷயம். இதை அவையில் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பாணியில் பேசுவது தவறானது" என்று அவர் கூறினார்.