விளையாட்டு

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!

ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது லக்னோ அணி.

LSG vs PBKS: ஒரே ஓவரில் 32 ரன்கள்.. மோசமான சாதனை படைத்த லக்னோ!
Aiden markram
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி படுதோல்வியைச் சந்தித்ததுடன், ஐபிஎல் வரலாற்றில் தனது அணியின் மிக மோசமான பந்துவீச்சு சாதனையையும் பதிவு செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற லக்னோ - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், தொடக்கத்தில் முகமது ஷமி விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்தாலும், பின்னர் வந்த பஞ்சாப் பேட்டர்கள் லக்னோ பந்துவீச்சை நிலைகுலையச் செய்தனர். குறிப்பாக, எய்டன் மார்க்ரம் வீசிய ஒரே ஓவரில் ரன்கள் மழை பொழிந்தது லக்னோ அணியின் தோல்வியை உறுதி செய்தது.

சிக்ஸர் மழை பொழிந்த 13-வது ஓவர்

ஆட்டத்தின் 13-வது ஓவரை வீச எய்டன் மார்க்ரமை கேப்டன் ரிஷப் பண்ட் அழைத்தார். அந்த ஓவரில் கூப்பர் கோனோலி முதல் மூன்று பந்துகளிலும் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டினார். ஒரு வைடு மற்றும் ஒரு ரன்னுக்குப் பிறகு, ஸ்ட்ரைக்கிற்கு வந்த பிரியான்ஷ் ஆர்யா கடைசி இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இதன் மூலம் அந்த ஒரே ஓவரில் மட்டும் 32 ரன்கள் குவிக்கப்பட்டன.

மோசமான சாதனை

இதற்கு முன்பு லக்னோ அணி சார்பில் ரவி பிஷ்னோய் (27 ரன்கள்) மற்றும் ஆவேஷ் கான் (26 ரன்கள்) ஆகியோர் ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்தனர். தற்போது 32 ரன்கள் வாரி வழங்கியதன் மூலம், லக்னோ அணியின் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்களைக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற தேவையற்ற சாதனையை மார்க்ரம் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.