விளையாட்டு

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அஜிங்க்யா ரஹானேவின் உருக்கமான வீடியோ பதிவு!

அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: அஜிங்க்யா ரஹானேவின் உருக்கமான வீடியோ பதிவு!
Ajinkya Rahane
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான அஜிங்க்யா ரஹானே, சர்வதேசக் கிரிக்கெட் மற்றும் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

38 வயதான ரஹானே, கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தார். பிரீமியர் லீக்கில் கொல்கத்தா அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருக்கிறது. பேட்டிங்கில் சரியான நேரத்தைக் கணிப்பது போல, வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்ல இதுவே சரியான நேரம். நேர்மையுடன் விளையாடிய எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி" எனக் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, ஒட்டுமொத்தமாக 8,414 சர்வதேச ரன்களைக் குவித்துள்ளார். மேலும், டெஸ்ட் அணியின் கேப்டனாகச் செயல்பட்ட 6 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்; இரண்டை டிராவில் முடித்துள்ளார்.

குறிப்பாக, 2020-21 பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டான பிறகு, விராட் கோலி தாயகம் திரும்பிய சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஹானே, தனது சிறப்பான சதம் மற்றும் தலைமைத்துவத்தால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிக் வரலாற்றுச் சாதனை படைத்தார். 2023-இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியே இவர் இந்திய சீருடையில் விளையாடிய கடைசிப் போட்டியாகும்.