தமிழ்நாடு

கானா பாடல் போடுவதில் தகராறு.. கோயில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்!

காஞ்சிபுரம் அருகே ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கானா பாடல் போடுவதில் தகராறு.. கோயில் திருவிழாவில் நடந்த கொடூர சம்பவம்!
Double Murder
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி பகுதியில் நடைபெற்ற ஆடி மாதத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படுநெல்லி கிராமத்தில் நேற்று இரவு ஆடித் திருவிழா விமரிசையாக நடைபெற்று வந்தது. அப்போது மதுபோதையில் இருந்த சிலர், ஒலிபெருக்கியில் கானா பாடல்களைப் போடுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், போதையில் தகராறு செய்த நபர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர்.

காவல்துறையினர் எச்சரித்து அனுப்பிய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் விக்கி ஆகிய இரண்டு இளைஞர்களை மர்மக் கும்பல் ஒன்று திடீரெனச் சூழ்ந்து சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததைக் கண்ட அக்கூட்டம் அங்கிருந்து தப்பிச் சென்றது.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்ற முயன்றபோது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். காவல்துறையினர் பாதுகாப்பில் இருக்கும்போதே இச்சம்பவம் நடந்துள்ளதாகவும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்குக் காரணம் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல்துறையினர் நடத்திய நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தப்பியோடு சென்ற கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.