தமிழ்நாடு

இந்த டைம்-ல மட்டும் வெளியே வராதீங்க.. எச்சரிக்கும் மத்திய அரசு!

நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த டைம்-ல மட்டும் வெளியே வராதீங்க.. எச்சரிக்கும் மத்திய அரசு!
Summer
நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கோடையின் உக்கிரம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக, வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான காலகட்டத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிற்பகல் நேரக் கட்டுப்பாடுகள்

பிற்பகல் நேரங்களில் வெளியில் இருக்கும்போது ஓடுவது அல்லது கடினமான உடல் உழைப்பு கோரும் வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், வெளியில் செல்லும்போது வெறுங்காலுடன் செல்வதைத் தவிர்த்து, கண்டிப்பாகப் செருப்பு அணிந்து செல்ல வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் வேளையில் வீடுகளில் சமைப்பதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலறைகள் போதுமான காற்றோட்டத்துடன் இருப்பதை உறுதி செய்ய கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உணவுக் கட்டுப்பாடு மற்றும் அவசர உதவிகள்

உடல்நலனைக் காக்க மது, தேநீர், காபி, செயற்கை பானங்கள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட குளிர் பானங்களைப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், கெட்டுப்போன பழைய உணவுகளையும் உட்கொள்ளக் கூடாது. கடுமையான வெயில் காரணமாக யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ, மயக்கம் அல்லது குழப்பமான மனநிலை ஏற்பட்டாலோ, தாமதிக்காமல் உடனடியாக 108 அல்லது 102 ஆகிய அவசர உதவி எண்களைத் தொடர்புகொண்டு மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது வழிகாட்டுதலில் எச்சரித்துள்ளது.