தமிழ்நாடு

கோவையில் கொடூர சம்பவம்: சிறுமி கொலையின் பின்னணி என்ன?

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கொடூர சம்பவம்: சிறுமி கொலையின் பின்னணி என்ன?
Coimbatore
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட கொடூர சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, சிறுமியின் வீட்டின் அருகே இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடல் உடனடியாக மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை சந்தேகம் மற்றும் கைது நடவடிக்கை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கினர். இதில் தொடர்புடையதாக அதே பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரைப் பிடித்து விசாரித்ததில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் கார்த்திக் என்பவர் தப்பியோட முயன்றபோது கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான மோகன் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் சாலை மறியல்

இக்கொடூரச் சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிகளைக் கடுமையான தண்டிக்க வலியுறுத்தியும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.