சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சுமார் 5.8 கிமீ உயரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் வடக்கு கடலோர கேரளா வரை தமிழகம் வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது." என தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இன்று (08-08-2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதேபோல் நாளையும் "மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு (08-08-2026 முதல் 11-08-2026) அதிகபட்ச வெப்பநிலையாக 'தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்' எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 'இன்று (08-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்' என சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
கடலோர பகுதிகள் மற்றும் மீனவர்களுக்கான அறிக்கையில், 'இன்று (08-08-2026) தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.' எனவும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
LIVE 24 X 7













