தொழில்நுட்பம்

"இது புதுசு கண்ணா.." இந்தியாவின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார் அறிமுகம்!

இந்தியாவின் முதலாவது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை (Flex Fuel Car) மாருதி சுஸுகி நிறுவனம் இன்று (ஜூன் 4) அதிகாரப்பூர்வமாகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது.


Indias first flex fuel car introduced
இந்தியாவின் முதலாவது ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை (Flex Fuel Car) மாருதி சுஸுகி நிறுவனம் இன்று (ஜூன் 4) அதிகாரப்பூர்வமாகப் பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளது. நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற வேகன் ஆர் காரின் புதிய பதிப்பான 'மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ்' (BioFlex) என்ற கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் முன்னிலையில் இந்த கார் பொதுப் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது மற்றும் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்துவது ஆகிய இந்தியாவின் முக்கிய இலக்குகளை அடைய இந்த கார் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கார் E85 வரையிலான எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டது. அதாவது, 15 சதவீதம் பெட்ரோல் மற்றும் 85 சதவீதம் எத்தனால் (Ethanol) கலந்த கலவையில் இது சிறப்பாக இயங்கும். கரும்பு போன்ற விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்பதால், இது நாட்டின் பொருளாதாரத்திற்கும் இந்திய விவசாயிகளுக்கும் பெரிய அளவில் நன்மைகளைத் தரும். கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போக்களில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார், தற்போது முழுமையான தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த E20 எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த அளவைப் படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு இத்தகைய ஃப்ளக்ஸ் ஃப்யூயல் கார்களின் வருகை அவசியமானதாகும். இந்த மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், மிக விரைவில் இதன் விலை அறிவிக்கப்பட்டு முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.