உலகம்

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி? ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!

ஈரானிய மதகுரு அலி அயத்துல்லா கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமேனியின் இறுதிச் சடங்கில் மோடி?  ஈரான் அதிபரின் திடீர் அழைப்பு!
கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்சத் தலைவரும், மதகுருவுமான அய்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி, ஒருவர் இறந்த சில நாட்களுக்குள் இறுதி சடங்குகள் பொதுவாக நடத்தப்படும். இருப்பினும், கமேனியின் இறுதிச் சடங்கில் அதிக எண்ணிக்கையிலான துக்கப்படுபவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் ஏற்பாடுகளில் உள்ள சவால்களைக் காரணம் காட்டி, இறுதிச் சடங்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் மார்ச் மாத தொடக்கத்தில் அறிவித்தனர்.

இந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு மற்றும் உடல் அடக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேதியை ஈரான் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, கமேனியின் இறுதிச்சடங்கு ஜூலை 4-ஆம் தேதி தலைநகர் தெஹ்ரானில் தொடங்கி, ஜூலை 9-ஆம் தேதி அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷாத்தில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது.

ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் தெஹ்ரானில் பிரியாவிடை நிகழ்ச்சிகளும், ஜூலை 6 அன்று இறுதி ஊர்வலமும் நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 7-ல் புனித நகரான கோமில் சிறப்பு தொழுகையும், ஜூலை 9-ல் மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற இமாம் ரெசாவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

"தெஹ்ரானில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்வு குறைந்தது 24 மணிநேரம் நீடிக்கும் என்றும் இந்நிகழ்வில் சுமார் 1.5 கோடி முதல் 2 கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.