ஆன்மிகம்

மதுரை சித்திரை திருவிழா- ஹைலைட் நிகழ்ச்சிகளின் முழு விவரம்

புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைப்பெற உள்ள நிலையில், மற்ற ஹைலைட் நிகழ்ச்சிகளின் விவரங்கள் காண்க.

மதுரை சித்திரை திருவிழா- ஹைலைட் நிகழ்ச்சிகளின் முழு விவரம்
madurai meenakshi thirukalyanam happened today
சித்திரை மாதம் என்றாலே பலருக்கும் நினைவில் வருவது, கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் தான். இன்று நடைப்பெறும் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து திருத்தேரோட்டம், கள்ளழகர் புறப்பாடு, எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்குதல் என அடுத்தடுத்து நடைபெற உள்ள நிகழ்வுகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது மதுரை மாநகரம்.

மே 08 - மீனாட்சி திருக்கல்யாணம்:

மலையத்வஜன் மகள் தடாதகையாக மூன்று தனங்களுடன் பிறந்த அம்பிகை, சொக்கனைக்கண்டு சொக்கி நின்றாள். அப்போது அவளின் மூன்றாவது தனம் மறைந்தது. தனக்கு உரிய நாதன் அவரே என்று உணர்ந்த மீனாட்சி, தாய் காஞ்சனமாலை ஆசிகூற, தமையன் அழகன் (அழகன் வரத் தாமதமானதால் மகேசனே மாதவனாகவும் வடிவெடுத்தது வேறு கதை) தாரை வார்த்துத்தர, சுந்தரேசன் கரம்பிடித்து, மதுரை வீதியில் மங்களமாய்த் திருவுலா வந்தாள். அந்தப் புராண சம்பவத்தை நினைவூட்டும் நிகழ்வு,மீனாட்சி திருக்கல்யாணம். இதைக் கண்டால், திருமணத் தடைகள் நீங்கும், காதல் கைகூடும், மணவாழ்வில் பிரச்னைகள் நீங்கும். தாலிபாக்யம் நிலைக்கும். நிம்மதி நிறையும்.

மே 09 - மீனாட்சி திருத்தேரோட்டம்:

மனதுக்குப் பிடித்த மகேசனை மாலையிட்டு மணந்த மகிழ்வோடு, அன்னை மீனாட்சி மதுரைக்கு அரசியாக, சுந்தரேசன் நாயகியாக தன் நாட்டு மக்களின் தாயாக, திருத்தேர் ஏறி மதுரையை வலம் வந்தாள். வழியெங்கும் மக்கள் வாழ்த்தொலி முழங்க, கம்பீரமாக பவனிவந்தாள் அன்னை. விழி மூடாது தன் குஞ்சுகளைப் பேணிக் காத்திடும் மீன் போல, தன் விழி மூடாது தன் நாட்டு மக்களைக் காப்பவள் மீனாட்சி. மதுரை அரசியாக திருத்தேரில் பவனிவரும் அன்னையை தரிசிக்க ஊரும்...அவளை வரவேற்கக் குவிகிறார்கள் பக்தர்கள்.

மே 10 - கள்ளழகர் புறப்பாடு:

தங்கை மீனாளின் கல்யாண வைபவம் காண தங்கப் பல்லக்கில் திருமாலிருஞ்சோலையில் இருந்து திருமால் புறப்பாடு காணுவார். அதுவும் கள்ளழகராக அவர் எழுந்தருளும் திருக்காட்சியைக் காண்போரின் உள்ளங்கள், அவரழகில் களவுபோவது நிச்சயம்.

மே 11 - கள்ளழகர் எதிர்சேவை:

எதிர்கொண்டழைத்து எம்பெருமானுக்கு சேவை செய்வார்கள் பக்தர்கள். சிவகங்கை சமஸ்தானம் தொடங்கி, மூன்றுமாவடி கடந்து, தல்லாகுளம் வந்து தங்குவார் அழகர். அன்றிரவு அங்கே அவருக்கு வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாத்தப்படும். தங்கக் குதிரைவாகனத்திலும் சாத்துபடி ஆகும். அங்கே அழகர் உடுத்தும் வஸ்திரம்தான், விசேஷமாகச் சொல்லப்படும்.

மே 12 - கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்:

12.05.2025 அன்று, காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் வைகையில் எழுந்தருள இருக்கிறார் எம்பெருமான் கள்ளழகர். இதற்குத்தான் காத்திருந்தோம் இத்தனை நாளாக என்று அத்தனை பக்தர்களும் அவன் திருவடியே கண்டு, அவன் திருவடிவே பேசி, அவன் திருவினையே கேட்டு திளைத்துக்கொண்டாடும் திருவிழா! மதுரையே அதிரும். மங்களங்கள் நிறையும்.