வேங்கை வாசல் பெயர்க்காரணம்?
ஊரின் எல்லையில் வேங்கை மரங்கள் அதிகமாக வளர்ந்ததால் வேங்கை மர வாசல் என்று அழைக்கப்பட்டு பின்னர் வேங்கை வாசல் என மாறியதாகக் கூறுகின்றனர். மேலும் தாம்பரத்திலிருந்து வேளச்சேரிக்கு ஒற்றையடி பாதையாக இவ்ஊரில் காட்டிலே வழி இருந்ததாம். அதன் வழியாக இரவு நேரங்களில் புலிகள் சென்றதாகவும் அதனால் வேங்கை வரும் வாசல் என்று சொல்லப்பட்டு பின்னர் வேங்கை வாசல் ஆகமாறியது எனவும் சொல்கின்றனர்.
(புதுக்கோட்டையிலும் வேங்கைவாசல் என்ற பெயரில் ஒரு தலம் உள்ளது. அங்கே அருள்பவர், வியாக்ர புரீஸ்வரர்). இத்தல இறைவனுக்கு சொர்ணபுரீஸ்வரர் என்று பெயர் வந்த தலபுராணத்தைப் பார்ப்போம். அகத்தியரும், வியாக்கிரபாதரும் இந்த சிவனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்தனர். அப்போது, இறைவனுக்கு சொர்ணத்தால், அதாவது தங்கத்தால் அபிஷேகம் செய்ய விரும்பினார்கள் அந்த முனிவர்கள். ஆனால், துறவிகளான அவர்களிடம் சொர்ணம் இல்லாததால், மஞ்சள் மற்றும் தங்க நிறமான மலர்களை அர்ச்சித்து அவற்றைப் பொன்மலர்களாக ஏற்றருள வேண்டினர்.
அவர்கள் பூஜையால் மகிழ்ந்த இறைவன், தன்மீது விழுந்த மலர்களை தங்க மலர்களாகப் பொழியச் செய்ததோடு, பின்னர் அவற்றை தங்கக் காசுகளாக மாறச்செய்து முனிவர்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஆனால், அதனை ஏற்க மறுத்த முனிவர்கள், "எம்பெருமானே முனிவர்களான எங்களுக்கு இது வேண்டாம். அதற்கு பதிலாக, உரியவர்க்கு உரிய நேரத்தில் கிட்டச் செய்யுங்கள். அதோடு, தங்கள் பெயர் சொர்ணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படவேண்டும்!” என வேண்டினர். அதை ஏற்று இறைவன் சொர்ணபுரீஸ்வரர் ஆனார். முனிவர்களுக்காகப் பொழிந்த தங்கக் காசுகள் கருவறையிலேயே புதைந்தன.
கருவறையில் தோண்டத்தோண்ட தங்கக் காசு:
இரண்டாம் குலோத்துங்க சோழன், பல்லவ மன்னனை வெற்றி கொண்டதன் நினைவாக இக்கோயிலை பெரிதாகக் கட்ட முற்பட்டான்.ஆனால், கோயில் கட்ட ஆகும் செலவை நினைத்து திகைத்தான். சிவன் மேல் பாரத்தை போட்டு செயலில் இறங்கினான். சிவனைச் சுற்றி பெரிய கருவறை அமைக்கத் தோண்டத்தோண்ட தங்கக் காசுகள் கிடைத்தன. இதனால் மகிழ்வோடு திருக்குளம், மதில் சுவர், சன்னதிகள் என மிகப்பெரிய கோயிலாகக் கட்டினான்.
பின்னர் மாலிக்காபூர் என்ற மன்னன் படையெடுப்பின் போது அவனுடைய தளபதிகளில் ஒருவன் இக்கோயிலின் வரலாறை அறிந்து கருவறையில் மேலும் தங்கக் காசுகள் இருக்கலாம் என்று எண்ணி கோயிலை முழுவதுமாக இடித்துத் தரை மட்டமாக்கினான். அவனுக்கு ஒரே ஒரு தங்கக்காசு கூட கிடைக்கவில்லை.
நவலிங்கபுரத்தில் இருக்கவேண்டிய ஒன்பது கோயில்களில் ஏழு கோயில்கள் தான் 1990 வரை இருந்தன. இரு கோயில்களை காணவில்லை. பின்னர் வரலாற்று ஆய்வாளர்கள், மாடம்பாக்கத்தின் வடகிழக்கில் ஒரு சிவாலயம் இருந்திருக்க வேண்டும் என்று கூறியதை அடுத்துத் தேடியதில், அங்கிருந்த கருவேலங்காட்டில் பள்ளமான பகுதியில் சிவலிங்க பாணம் ஒன்று மேலே தெரியும்படியாக மண்ணில் புதையுண்டு இருப்பதைக் கண்டனர். மண்ணை அகற்றி தோண்டியபோது சிறிய சிவலிங்கம், சேதமடைந்த நந்தியின் சிலை, சில கல் தூண்கள் ஆகியவை 1992-ல் கிடைத்தன. சிவலிங்கத் திருமேனியை எடுத்து வைத்து, சிறிய கூரை அமைத்து வழிபட்டனர். ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் சீடர் சாந்தம் ராம் மோகன் அவர்களும் அவரது குழு இளைஞர்கள் மற்றும் பக்தர்களும், ஊர் மக்களும் சேர்ந்து கோயிலைச் சிறிதாக கட்டினார்கள். சுவாமி, அம்பிகை, நந்தி ஆகியவற்றை வைத்து முதல் கும்பாபிஷேகம் நடத்தினார்கள்.
நீல நிறமாக மாறுவது ஏன்?
இத்தலத்து இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் நீல நிறமாக மாறும். அதன் பின்னாலும் புராணக்கதை ஒன்று உண்டு. சர்ப்ப ராஜனான வாசுகி என்ற பாம்பு ஒரு முறை பார்வதிதேவியை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க, அதை அறிந்த அன்னை; சர்ப்பமே நீ உன் பலத்தை இழப்பாய். நீ செய்யும் பணியை அந்த பரமேஸ்வரனே செய்வார்? என்று சாபம் கொடுத்தார். பரமேஸ்வரனும் அந்தப் பணியைத் தொடங்க, விஷமானது அவரது கழுத்துப் பகுதியில் அதிகமாக ஏறியது.
பின்னர் வாசுகிப் பாம்பு, மகாவிஷ்ணுவின் ஆலோசனைப்படி வேங்கை மரங்கள் நிறைந்த பகுதியில் வியாக்கிரபாதர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை 48 நாட்கள் பசும் பாலால் அபிஷேகம் செய்து, பூஜித்தது. அதனால் அதனுடைய சாபம் நீங்கியதை அடுத்து, பரமேஸ்வரன் கழுத்தில் உள்ள விஷம் குறைந்தது.
அதை நினைவுருத்தும் வகையிலேயே இத்தல சிவலிங்க பாணத்தின் மீது அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாத்தோன்றி பிறகு பாணத்தின் கீழ் ஆவுடையில் வெண்ணிறமான அமுதமாக பாலாக மாறுகிறது. மேற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், மகா மண்டபத்தில் சுவாமி, அம்பாள் கருவறை அமைந்துள்ளது. கருவறை வாசலில் விநாயகர், பாலமுருகன் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.
இரண்டடி உயரத்தில் சொர்ணபுரீஸ்வரர்:
பிராகாரத்தில் கணபதி, ஐயப்பன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், அரசு வேம்பு இணைந்துள்ள தலவிருட்சம், நாகர்கள், மற்றும் பைரவர், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் உள்ள வாசல் வழியாகச் சென்றால் திருக்குளம் உள்ளது. பூமியில் புதையுண்டு பின்னப்பட்டு இருந்த நந்தி ஒன்று வடக்கு வாசல் அருகே உள்ளது. சுவாமி கருவறை எதிரே ஒரு புதிய நந்தி உள்ளார்.
கருவறையில் சொர்ணபுரீஸ்வரர் இரண்டடி உயரத்தில் பீடத்தில் உள்ளார். சிவலிங்க பாணத்தில் பால் அபிஷேகம் செய்யும்போது மேலே விழும்போது வெண்மையாகவும், பாணத்தின் கீழே வரும் போது நீல நிறமாகவும், ஆவுடையில் விழுந்து கீழே விழும்போது மீண்டும் வெண்மை நிறத்திலும் இருந்ததாகவும் இதை பல பக்தர்கள் பார்த்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அம்பிகை தெற்கு நோக்கிய சன்னதியில் மங்களாம்பிகை என்ற திருநாமத்தோடு அருள் பாலிக்கிறார். பிரதோஷம் மற்றும் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி வேலைகள் நடந்து வருகின்றன.
சொர்ணபுரீஸ்வரரை தரிசித்துவிட்டு, அவரது ஆசியுடன் நேர்மையாக எத்தொழிலைச் செய்தாலும், எப்பணியினைச் செய்தாலும் அவர்கள் வாழ்வில் சொர்ணமாகச் செல்வம் பெருகிட அருள்வார் என்பது நம்பிக்கை.
எங்கே இருக்கு?
வேளச்சேரி - கிழக்கு தாம்பரம் சாலையில் சந்தோஷ்புரம் ஊரைக் கடந்து வேங்கைவாசல் ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள பஜனை கோயில் இரண்டாவது குறுக்குத்தெரு முடிவில் திருக்கோயில் உள்ளது. தரிசன நேரம்: காலை: 7 - 9; மாலை 5 - 8.
(கட்டுரை: நெல்லை கந்தகுமார் / குமுதம் பக்தி இதழ் /22.5.2025)